தோட்டத்தில் ரோஜாக்கள் வேகமாக பூத்து குலுங்கனுமா? வீட்டில் தயாரித்த இந்த உரங்களை பயன்படுத்துங்க - Seithisudar

Friday, May 2, 2025

தோட்டத்தில் ரோஜாக்கள் வேகமாக பூத்து குலுங்கனுமா? வீட்டில் தயாரித்த இந்த உரங்களை பயன்படுத்துங்க

 



ரோஜா செடிக்கு செயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து 5 வகையான கரிம உரங்கள் தயாரிக்கலாம். ரோஜா செடிகள் பூத்து குலுங்குவதற்கு இந்த உரங்களை பயன்படுத்தினால் போதுமானது. 


மிகவும் அழகான பூக்களில் ஒன்று ரோஜா. இந்த ஒரு செடி வீட்டில் இருந்தால் வீட்டின் முழு தோற்றமும் அழகாக மாறும். அதனால் தான் எத்தனையோ பூக்கள் இருந்தாலும் ரோஜா தான் 'பூக்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. பலர் தங்கள் வீட்டின் அழகை மெருகேற்ற தொட்டிகளிலோ அல்லது வீட்டு தோட்டங்களிலோ ரோஜா செடிகளை நடுகின்றனர். ரோஜா செடிக்கு சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் பூக்கள் பூக்காது. இதனால் மக்கள் பல்வேறு வகையான ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். இப்படி செயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து ரோஜா செடிக்கு 5 வகையான கரிம உரங்கள் தயாரிக்கலாம்.


வேப்ப விதை பொடி உரம்




  • வேப்ப விதை பொடி தாவரத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது.
  • இதற்கு வேப்ப விதைகளை பொடியாக அரைத்து மண்ணில் தூவவும். வேப்ப விதைத் தூள் மண்ணின் அமைப்பு, காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்பு திறனை மேம்படுத்துகிறது.
  • மேலும் வேப்ப விதையில் உள்ள அசாடிராக்டின் சக்தி வாய்ந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.


உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை தோல் உரம்


  • உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை தோலின் உதவியுடன் ரோஜா செடிக்கு திரவ உரம் தயாரிக்கலாம்.
  • முதலில் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று நாட்கள் முடி ஊற வைக்கவும்.
  • அதேபோல் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சை தோல்களை போட்டு மூன்று நாட்கள் மூடி ஊற வைக்கவும்.
  • மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை தோல் கலவையை கலந்து வடிகட்டினால் திரவ உரம் தயார்.
  • இதில் 30 மில்லி திரவ உரத்தை ரோஜா செடியின் வேர் பகுதியில் ஊற்றவும். இப்படி 15 நாள் இடைவெளியில் ஊற்ற வேண்டும். இந்த திரவ உரம் செடியில் ரோஜாக்களை வேகமாக துளிர்விட செய்யும்.


பூண்டு மற்றும் வெங்காய தோல் உரம்


  • தேவையான அளவு பூண்டு மற்றும் வெங்காய தோலை மூன்று நாட்கள் வரை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி திரவ உரத்தை பிரித்தெடுக்கவும்.
  • இந்த திரவ உரத்தை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை ரோஜா செடியின் வேர் பகுதியில் ஊற்றவும்.
  • பூண்டு மற்றும் வெங்காயத் தோல்களில் காணப்படும் பொட்டாசியம் திரவ உரத்தில் கலந்திருக்கும். அவை ரோஜா செடியின் மண்ணை அதிக சத்தானதாக மாற்றும்.


மஞ்சள் மற்றும் வேப்பிலை உரம்

  • மஞ்சள் மற்றும் வேப்பிலை பூச்சிக்கொல்லியாக செயல்படுவதுடன் ரோஜா செடிக்கு நல்ல உரமாகவும் இருக்கும்.
  • வேப்பிலை கரைசலில் மஞ்சளை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி ரோஜா செடியை சுற்றி ஸ்ப்ரே செய்யவும்.
  • மஞ்சள் மற்றும் வேப்பிலை மண்ணில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • மஞ்சளில் உள்ள குர்குமின் ரோஜா செடிக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை விரட்டும். அதேபோல் வேப்பிலை கரைசலும் ரோஜா செடியில் இருந்து பூச்சிகளை விலக்கி வைக்கும்.


முட்டை ஓடுகள்

  • முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு மனிதர்களுக்கு சத்தானது போல் முட்டை ஓடுகள் தாவரங்களுக்கு சத்தானவை.
  • முட்டை ஓடுகளை உடைத்து, பொடியாக அரைத்து ரோஜா செடியின் மண்ணின் மேற்பரப்பில் தூவி விடுங்கள்.
  • முட்டை ஓடுகளில் உள்ள கால்சியம், ஃப்ளோரின் மற்றும் ஸ்ட்ரோண்டியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் ரோஜா செடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு அதன் வளர்ச்சிக்கும் உதவும்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot