மாணவர் சேர்க்கை - அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் அறிவித்த அரசு - Seithisudar

Sunday, June 1, 2025

மாணவர் சேர்க்கை - அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் அறிவித்த அரசு

 



கடந்த ஆண்டைக் காட்டிலும் மாணவர்களை கூடுதலாகச் சேர்த்தால், அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


அதேபோல மார்ச் 1ஆம் தேதியே மாணவர் சேர்க்கைக்கான பணிகளும் தொடங்கி, சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:

அரசாணை (நிலை) எண்‌.81, பள்ளிக்‌ கல்வித்‌துறை, நாள்‌.15.03.2024, இன்படியும்‌ மாணவர்‌ சேர்க்கை மார்ச்‌ 1 ஆம்‌ தேதி முதல்‌ நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களைத்‌ தவறாமல்‌ பின்பற்றவும்‌, தேவையான நடவடிக்கையை பள்ளித்‌ தலைமையாசிரியர்‌ மேற்கொள்ள வேண்டும்‌.


மாணவர்‌ சேர்க்கைக்‌ கொண்டாட்டம்‌ அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளி திறந்த முதல்‌ நாள்‌ அன்றே நடத்தப்படவேண்டும்‌.


தொடக்கப்‌ பள்ளிகளில்‌ முதல்‌ வகுப்பில் முழு சேர்க்கை

குறிப்பாக தொடக்கப்‌ பள்ளிகளில்‌ முதல்‌ வகுப்பு சேர்க்கை முழுமையாக உள்ளதை உறுதி செய்திட ஆசிரியர்கள்‌ முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்‌. பள்ளி அமைந்துள்ள பகுதிகளில்‌ பள்ளி செல்லும்‌ வயதுடைய அனைத்துக்‌ குழந்தைகளையும்‌ பள்ளியில்‌ சேர்ப்பதை உறுதி செய்திடல்‌ அவசியம்‌.


8 ஆம்‌ வகுப்புத்‌ தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ 9ஆம்‌ வகுப்பு சேர்வதை உறுதி செய்திட வேண்டும்‌.


அரசுப்‌ பள்ளிகளுக்குப்‌ பாராட்டுச் சான்றிதழ்‌

பள்ளியின்‌ சிறந்த செயல்பாடுகளைப்‌ பள்ளிக்கு அருகில்‌ உள்ள குடியிருப்புகளில்‌ வசிக்கும்‌ பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும்‌ விளம்பரங்கள்‌ மற்றும்‌ கலை நிகழ்ச்சிகளின்‌ மூலம்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ அரசின்‌ பல்வேறு நலத்திட்டங்களைப்‌ பற்றி விளக்கி, கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம்‌ 50 மாணவர்களைக்‌ கூடுதலாகச்‌ சேர்க்கும்‌ அரசுப்‌ பள்ளிகளுக்குப்‌ பாராட்டுச் சான்றிதழ்‌ வழங்கப்படும்‌ என பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


உரிய நடைமுறைகளைப்‌ பின்பற்றி இம்மாணவர்‌ சேர்க்கையில்‌ சிறப்பு கவனம் செலுத்தி அரசுப்‌ பள்ளிகளில்‌ தரமான இலவசக்‌ கல்வி வழங்கப்படுவதைப்‌ பொது மக்கள்‌ அனைவரும்‌ அறியும்‌ வண்ணம்‌ பேனர்கள்‌ மற்றும்‌ துண்டு பிரசுரங்கள்‌ மூலம்‌ மாணவர்களின்‌ பெற்றோர்களுக்குத்‌ தெரியப்படுத்தி மாணவர்கள்‌ சேர்க்கையை அதிகரிக்கச்‌ செய்ய வேண்டும்‌. மாணவர்‌ சேர்க்கைக்கான சிறப்பு முகாம்களையும்‌ பள்ளி வாரியாக நடத்த வேண்டும்.


மாவட்ட மக்கள்‌ தொடர்பு அலுவலர்களை அணுகி அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை குறித்துச்‌ செய்தித் தாள்களில்‌ செய்திகள்‌ வெளியிட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot