உதவிப் பேராசிரியர் நியமன வழக்கு - ஐகோர்ட் தள்ளுபடி - Seithisudar

Sunday, June 15, 2025

உதவிப் பேராசிரியர் நியமன வழக்கு - ஐகோர்ட் தள்ளுபடி

 



சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்காமல் மேற்கொள்ளப்பட்ட 5 உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காலியாக இருந்த 64 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, 5 உதவி பேராசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் மகேஸ்வரி, மேனகா உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.


இந்த வழக்குகள் நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்குவது குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தங்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. தங்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஒப்புதல் வழங்கும்படி கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட வேண்டும்.” என்று வாதிடப்பட்டது.


அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், “இன சுழற்சி முறை மற்றும் தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை என உரிய நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை. நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரி தான் வழக்கு தொடர முடியும். நியமனம் பெற்றவர்கள் வழக்கு தொடர முடியாது.” என்று வாதிட்டார்.


அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot